டூயட்டில் உணர்ச்சியில்லை : எஸ்.பி.பி.பேச்சு
நவீன பாணி பாடல் பதிவு டூயட்டில் உணர்ச்சியில்லை எஸ்.பி.பி.பேச்சு
சென்னை, டிச 20: பாடகி இல்லாமல் நவீன பாணீயில் பாடல் பதிவு செவதால் டூயட்டில் உணர்ச்சியில்லை என்றார் எஸ்.பி.பாலசுபிரமணீயம் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் மற்றும் மோசர்பேர் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் 'வெள்ளித்திரை'. இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி கேசட்டை வெளியிட, மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
அவர்களை பாராட்டி பாடகர் எஸ்.பி.பாலசுபிரமணியம் பேசியதாவது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்து உலக சாதனை படைத்தவர்கள். அவர்களது இசையின் தாக்கம் இல்லாமல் இப்போது ஒரு பாட்டுகூட வெளிவருவதில்லை. இவர்கள் கடித்து துப்பிய எச்சிலைத்தான் இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஒரே ட்ராக்கில் அற்புதமான பாடல்களை கொடுத்தார்கள். இப்போது 200 ட்ராக் இருந்தாலும் அவரது தரத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை. நவீன இசையமைப்பில், உடன் பாடுபவர்களின் குரலும் கேட்பதில்லை. டூயட் பாட்டு என்றால் கூட தனியாக உணர்ச்சியே இல்லாமல் பாட வேண்டியுள்ளது. உடன் பாடுவது யார் என்று கேட்டால், 'இன்னும் முடிவு செய்யவில்லை, உங்க ட்ராக்கை மட்டும் பாடுங்கள்' என்று சொல்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். நடிகர் ப்ருத்விராஜ், இயக்குனர்கள் மணிரத்னம், விஜி, கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் ஷங்கர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினகரன். 20.12.2007