முதற் பதிவு
நமக்குள்ளே ஒரு பாடகர் உண்டு. சிலர் பாடும் திறமையை வெளிக்காட்டி முயன்று பாடகராகப் பரிமளிப்பது உண்டு. நம்மில் பெரும்பாலானோர் கூச்சப்பட்டுக்கொண்டு குளியலறையோடு பாடுவதை நிறுத்திக்கொள்வதுண்டு. சிலர் வீட்டுக்குள் பாடிக்கொண்டிருப்போம். ஆனால் பொதுவில் பேரமைதி காப்போம்.
பாலுவின் ரசிகர்களாக இருந்துகொண்டு அவரது பாடல்களை நம் வாய் முணுமுணுக்கவாவது செய்யாத நாட்களுண்டா?
ரசிகருக்காகவே இந்தப் பதிவைத் துவங்கியிருக்கிறேன்.
பாலுவின் ரசிகராக நீங்கள் உங்கள் குரலை இணையத்தில் ஒலிக்கச் செய்யலாம். கூச்சமோ நாச்சமோ என்ன வேண்டுமானாலும் பட்டுக் கொள்ளுங்கள். ஆனால் யாரும் பக்கத்தில் இல்லாத தருணங்களில் நீங்கள் மனம் விட்டுப் பாடும் பல தருணங்களைப் பதிவு செய்து ஒலிக்கோப்பாக வலையில் ஏற்றுங்கள். ஏற்றிவிட்டு அந்தச் சுட்டியை எனக்கு அனுப்புங்கள். அதை இந்த வலைப்பதிவில் பதிகிறேன். பாடல்களை வலையேற்றுவதற்கு esnips.com போன்ற தளங்களில் ஒரு இலவசக் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதில் சிரமம் இருந்தால் பாடலை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் (pepsundar@gmail.com). நான் வலையேற்றிக் கொள்கிறேன்.
உங்களுக்குள் புதைந்து கிடக்கும் உங்களின் திறமை அடையாளம் காணப்படலாம். உங்களுக்குள் இருக்கும் பாடகர் வெளிப்பட சந்தர்ப்பங்கள் உங்கள் கதவை தட்டலாம். எதுவும் இல்லாவிட்டாலும் மனத் திருப்திக்காக நீங்கள் பாடியது இணையத்தில் ஒலிக்கட்டும். என்றாவது பாலு இதைக் கேட்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஆகவே - பாடுங்கள், பதியுங்கள். கரோக்கியாகப் பாடினாலும் இசையற்றுப் பாடினாலும் எப்படி வேண்டுமானாலும் பாடிப் பதியுங்கள். எந்த வரம்பும் தர நிர்ணயமும் இல்லை. ஆதலால் சுதந்திரமாகப் பாடுங்கள். முழுப் பாடலைப் பாடாவிட்டாலும் ஒரு சரணத்தையாவது பாடுங்கள்.
உங்கள் குரல் இணையவுலகில் ஒலிக்கட்டும் - பாலுவின் சார்பாக, பாலுவின் ரசிகர்கள் குரலாக!
வாழ்த்துகள்.
6 comments:
வாழ்த்துகள் சுந்தர்.
நன்றி பாலராஜன் கீதா.
நேரம் கிடைக்கும்போது ஒரு பாட்டைப் பாடி அனுப்புங்கள். ப்ளீஸ்.
சுந்தர்,
//ரசிகருக்காகவே இந்தப் பதிவைத் துவங்கியிருக்கிறேன்//
சொல்லவே இல்லையே பரவாயில்லை கமுக்கமாக ஒரு நல்ல வேலை செய்திருக்கீங்க. எனக்கு நிறைய நண்பர்கள் (மேடை பாடகர்கள்) உள்ளனர் அவர்களிடம் கோப்பு கேட்டு தகவல்களுடன் நானும் பதிகின்றேன். ஆகையால் எனக்கும் ஒரு அழைப்பு அனுப்புங்கள். உங்களூக்கு புன்னியமாக போகும். உங்கள் முயற்சிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் தலைவா.
சுந்தர், உடனடியாக அழைப்பிதழ் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
ரவீ
மகி மேடம்கிட்ட ஒரு மாசம் முன்னாடி இதப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தேன். ரொம்ப நாளா மனசுல இருந்ததுதான். ரொம்ப தாமதம் பண்ண வேண்டாம்னு நேத்திக்கு அறிவிச்சுட்டேன். உங்கக்கிட்ட சொல்லாததுக்கு மன்னிக்க.
அது சரி. உங்க பாட்டை எப்ப அனுப்பப் போறீங்க?
சுந்தர்,
//மகி மேடம்கிட்ட ஒரு மாசம் முன்னாடி இதப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தேன். //
நான் இரண்டு வாரங்கள் முன் சாட்டில் காலாசிக்கிட்டோம் அவங்களூம் சொல்லவில்லை. சென்னை நிகழ்ச்சியில் பார்த்தேன் அதிகம் பேச முடியவில்லை.
//அது சரி. உங்க பாட்டை எப்ப அனுப்பப் போறீங்க? //
உங்களுக்கு இந்த விபரீதமான ஆசையெல்லாம் உண்டா?
Post a Comment